
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்திலில் வெற்றி வாகையை சூடினார். குகேஷ். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இந்த நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், தமிழரா? அல்லது தெலுங்கரா? என்ற வார்த்தை போர் தற்போது இணையத்தில் நடைபெற்று வருகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை வாழ்த்தும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மிக இளைய வயதில் உலக சாம்பியனான, குகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்களது சாதனை இந்தியாவின் செஸ் விளையாட்டு பாரம்பரியத்தைத் தொடர்கிறது. மேலும், மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு உங்களால் பெருமை கொள்கிறது’ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பதிவை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் சொந்த தெலுங்கு பையனான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்!’ என்று தெரிவித்திருந்தார். இரண்டு மாநில முதல்வர்கள் வெளியிட்ட பதிவுகளையடுத்து, குகேஷ் யார்? அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? என்ற வார்த்தை போர் இணையத்தில் தொடங்கி வருகிறது.