andhra atchutapuram sez pharma company boiler incident

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே உள்ள அச்சுதபுரம் என்ற இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) உள்ளது. இங்கு மருந்து கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலி தான் இன்று (21.08.2024) மதியம் இங்குள்ள பாய்லர் தீடிரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

அதன் பின்னர் தீயைக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கம்பெனியின் உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பாய்லர் வெடித்துத் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அனகாபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அனகாபள்ளி கூடுதல் போலீஸ் எஸ்.பி. தேவ பிரசாத் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் நிலைமை சீராக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

andhra atchutapuram sez pharma company boiler incident

இதற்கிடையே தீ விபத்திற்குப் பிறகு ஆலையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் எஸ்பி தீபிகா பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வெங்கடேஷின் சகோதரி ஹிரண்மயி கூறுகையில், “நான் செய்திகளைப் பார்த்து எனது சகோதரரைப் பல முறை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவரிடமிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை ஏதாவது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். அதுதான் அவர்கள் வெளியே வராததற்குக் காரணம். அவர் என்னை தொடர்புகொள்வார் என்று நினைத்தேன், ஆனால் அவர் என்னை அழைக்கவில்லை. இப்போது நான் இது குறித்து பாதுகாப்பு அலுவலர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எந்த தகவலும் கொடுக்காமல் என்னை இங்கிருந்து விலகி இருக்கச் சொல்கிறார்கள்” என உருக்கமாகத் தெரிவித்தார்.