/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1239.jpg)
புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு செலவு செய்த தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 3 மாதங்களில் வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்பதை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஏ.ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வகையில் செலவான 2 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான ரசீதுகளை புதுச்சேரி அரசுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ரசீதுகளை சரிபார்த்து தொகையை வழங்க அவகாசம் வேண்டும் என்பதால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற செய்த செலவு தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 3 மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.அதேபோல, தனியார் மருத்துவமனைக்கான செலவு தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)