ADVERTISEMENT

"யுத்தம் தீவிரமடையும்... நாம் வெல்வோம்" - அமித்ஷா உறுதி!

05:00 PM Apr 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்புப் பாதுகாப்பு படையினர், கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நேற்று (03/04/2021) அதிரடியாக ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வீரரைக் காணவில்லை, அவரை தேடும் பணி தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரமரணமடைந்த வீரர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவர் மாநில முதல்வர், அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு பேட்டியளித்த அமித்ஷா, நக்க்சல்களுக்கான யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என உறுதி கூறினார்.

இதுகுறித்து அவர், "நக்சல் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர், மத்திய அரசு மற்றும் தேசத்தின் சார்பாக நான் மரியாதை செலுத்தினேன். நக்சல்களுக்கு எதிரான போராட்டத்தை ஒரு தீர்க்கமான திருப்பத்திற்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். கடந்த சில ஆண்டுகளில், நக்சலிசத்திற்கு எதிரான போராட்டம் ஒரு தீர்க்கமான திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இந்தப் போராட்டத்தை இரண்டு படிகள் முன்னோக்கி கொண்டுசென்றுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன். இந்தச் சண்டை பலவீனமடையக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இது நமது வீரர்களின் மன உறுதி சிறிதளவும் குலையவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த யுத்தம் தீவிரமடையும். இறுதியில் நாம் வெல்வோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில், நாம் மாநிலத்தின் உள்பகுதிகளில் வெற்றிகரமாக முகாம்களை அமைத்துள்ளோம், இது நக்சல்களை எரிச்சலடையச் செய்துள்ளது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்துததிலும், ஆயுதக் குழுக்களுக்கு எதிராகச் சண்டையிடுவதிலும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நக்சல்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என சத்தீஸ்கர் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT