ஃபோன் ஒட்டுக்கேட்பு! அமித்ஷா பதவி விலக வேண்டும் ! - ராகுல் கொந்தளிப்பு !

Phone tapping! Amitsha must resign! - Rahul

‘பெகாசஸ்’, இந்த ஒற்றை வார்த்தைதான் இன்றைக்கு உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் சர்வதேச அளவில் 1,500க்கும் மேற்பட்டவர்களின் ஃபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டதாக அம்பலமாகியிருக்கும் விவகாரங்கள்தான் அதிர்ச்சிக்கு காரணம். இதில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறையினர் என முக்கியஸ்தர்களின் செல்ஃபோன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உதவியாளர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபல ஊடகவியலாளர்கள் உள்பட 300 இந்தியர்களின் செல்ஃபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மொபைல் அழைப்புகள்ஒட்டுக்கேட்பதை இந்திய அரசைத் தவிர வேறு எவரும் செய்திருக்க தேவையில்லை என்பதால், மத்திய மோடி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

இந்தப் பிரச்சனையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் அமளிகள்ஏற்பட்ட நிலையில், பெகாசஸ் குறித்து ஆவேசப்பட்டுள்ள ராகுல் காந்தி, "ஃபோன் ஒட்டுக்கேட்பு மிகப்பெரிய தேசத்துரோகம்" என்று மோடி அரசைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், "பெகாசஸ் மென்பொருளை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த ஸ்பைவேரை, பயங்கரவாத செயல்களை முறியடிக்க தீவிரவாதிகளின் ஃபோன்களை ஒட்டுக்கேட்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசிகளை மோடியும் அமித்ஷாவும் ஒட்டுக்கேட்டுள்ளனர். அதற்காக பெகாசஸைப் பயன்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்புக்கும் பெகாசஸ் பயன்பட்டுள்ளது;ரஃபேல் தொடர்பான விசாரணையைத் தடுக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேசத் துரோகம். இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்குப் பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும். அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும், இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பெகாசஸ் மென்பொருளை தனிநபர்களோ, ராணுவமோ வாங்க முடியாது. ஒரு நாட்டின் அரசாங்கம்தான் வாங்க முடியும். அதனால், இந்தியாவில் மோடி அரசுக்குத்தான் பெகாசஸைப் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. அதனால், அமித்ஷா பதவி விலக வேண்டும்" என்று ஆவேசப்பட்டுள்ளார் ராகுல் காந்தி.

Pegasus Spyware Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe