Skip to main content

முதல்வர் பதவியை தருவதாக நாங்கள் கூறினோமா..? அமித்ஷா கொதிப்பு!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அதிரடியாக அமல்படுத்தியது. இதையடுத்து, அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், தாங்கள் ஆட்சியமைக்க உரிமைக் கோரவில்லை என பாஜக அறிவித்தப்பின், சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாள்களாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்று வந்த அரசியல் நகர்வுகள் அப்படிதான் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்தும், சிவசேனா உடனான உறவு முறிவு குறித்தும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா இன்று அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிப் பெற்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடியும், நானும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பலமுறை கூறி வந்தோம். அப்போதெல்லாம் எங்களின் இந்தப் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிவசேனா புதிய கோரிக்கைகளை முன்வைத்தது ஏற்புடையதாக தோன்றவில்லை. முக்கியமாக, இரண்டரை ஆண்டு காலம் அவர்களுக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்பதை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை. இதற்கு முன்பு, வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைப்பதற்கு 18 நாள்கள் அவகாசத்தை ஆளுநர் அளித்ததாக தெரியவில்லை. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் ஆயுள்காலம் முடிந்த பிறகுதான், கட்சிகளை ஆட்சியமைப்பதற்கான உரிமை கோர ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனாவோ, தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் கூட்டணியோ, ஏன் பாஜக கூட ஆட்சி அமைக்க உரிமைக் கோரவில்லை. அதன் பிறகுதான் வேறு வழியின்றி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் ஒன்று கெட்டுப்போய் விடவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் பலம் தங்களுக்கு இருப்பதாக எந்தக் கட்சியாவது கருதினால், அவர்கள் தாராளமாக ஆளுநரை அணுகி ஆட்சியமைக்க உரிமைக் கோரலாம் என்று அவர் கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.