Skip to main content

“அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” - அமித்ஷா அதிரடி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Amit Shah said State governments have no power to stop CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சி.ஏ.ஏ சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (14-03-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சி.ஏ.ஏ சட்டத்தை கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பல முறை கூறியிருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம். சி.ஏ.ஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பிரிவினையின் காரணமாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் தங்கி, மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு வர முடிவு செய்தவர்களுக்கான சட்டம் இது.  

மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான இறையாண்மை உரிமை இது. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். எனவே, சி.ஏ.ஏ சட்டம் திரும்பப் பெறப்படாது. அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று இந்தியா கூட்டணிக்கே தெரியும். பா.ஜ.க.வும் மோடி தலைமையிலான அரசும், சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை ரத்து செய்வதில் சாத்தியமில்லை. இதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காமல் இருக்க நாடு முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு செய்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றைச் செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு.

சி.ஏ.ஏ குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. எனவே, சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.