Skip to main content

“ஒரு தமிழர் ஒடிசா முதல்வராக வேண்டுமா?” - அமித்ஷா விமர்சனம்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Amit shah cricticized if Tamil person to be Chief Minister of Odisha?

நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தொடங்கப்பட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி மீதமுள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிப் பேச வேண்டாம் என்றும் கூறுகிறது. நவீன் பட்நாயக் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நான் சொல்வதைக் கேளுங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது. நாங்கள் அதைத் திரும்பப் பெறுவோம். 

ஜூன்ன் 4 ஆம் தேதிக்குப் பிறகு நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்க மாட்டார். அவர் ஒடிசாவின் முன்னாள் முதல்வராக இருப்பார். 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 75 இடங்களுக்கு மேல் பெற்று மாநிலத்தில் பா.ஜ.க அடுத்த அரசாங்கத்தை அமைக்கும். அடுத்த முதல்வர், ஒடிசாவில் சரளமாக பேசுவதையும், மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்துகொள்வதையும் பா.ஜ.க உறுதி செய்யும். 

நாடு முழுவதும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டபோது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், அவரது அரசியல் வாரிசாக வரவிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரும் (வி.கே.பாண்டியன்) ஒடிசா மக்களைத் தடுக்க முயன்றனர். சொல்லுங்கள், ராம பக்தர்களைத் தடுக்க முயன்ற ஒருவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியுமா? ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியுமா? ஒடிசாவில் வசிக்கும் ஒடியா பேசும் இளம் முதல்வரை நரேந்திர மோடி உங்களுக்குக் கொண்டு வருவார். தாமரை சின்னத்திற்கு ஆதரவாக உங்கள் வாக்கை அளிப்பதன் மூலம், ஒரு அதிகாரிக்கு பதிலாக மாநிலத்தை ஆள ஒரு ஜன சேவக்கை கொண்டு வாருங்கள். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்ததும், இளைஞர்கள் வேறு எங்கும் வேலை தேடாமல் இருக்க தொழிற்சாலைகளை அமைப்போம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. 

Next Story

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்; உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Bail for Hemant Soren The ed sought the Supreme Court

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28 ஆம் தேதி (28.06.2024) ஜாமீனில் வெளியே வந்தார். அதனையடுத்து, சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (08.07.2024) நடந்தது. 

Bail for Hemant Soren The ed sought the Supreme Court

81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 27 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 17 எம்.எல்.ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 எம்.எல்.ஏக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதே போல், பா.ஜ.கவின் 25 எம்.எல்.ஏக்கள் உள்பட எதிர்க்கட்சியில் 27 எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் அளித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஹேமந்த் சோரனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சட்ட விரோதம். ஹேமந்த் சோரனுக்கு எதிராக முதன்மை ஆதாரமில்லை என உயர் நீதிமன்றக் கருத்து தவறானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.