Skip to main content

“ராகுல்காந்தி வந்தபிறகு தான் காங்கிரஸின் நடத்தை மாறியது” - அமித்ஷா குற்றச்சாட்டு

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Amit Shah alleges on Congress' behavior changed only after Rahul Gandhi came

நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தொடங்கப்பட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி மீதமுள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதில்லை. அனைத்து சர்ச்சைக்குரிய சட்டங்கள், பிரச்சினைகளான சட்டப்பிரிவு 370, சி.ஏ.ஏ குறித்து, எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதிலளித்தேன். விவாதங்களில் கலந்துகொண்டேன். ஆனால் எந்த விவாதமும் நடைபெறவில்லை. பாராளுமன்றம் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்படுகிறது என்று நான் வேதனைப்படுகிறேன்.

என்னுடைய கருத்துப்படி, ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியில் நுழைந்த பிறகுதான் காங்கிரஸின் நடத்தை மாறியது. அதன் பிறகுதான், அவர்களின் அரசியலின் தரம் வீழ்ச்சியடைந்தது. ஜனாதிபதியின் உரைக்கு பிரதமர் அளித்த பதிலில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதை நான் இதுவரை பார்த்ததில்லை. நாட்டு மக்கள் அவருக்கு பிரதமர் என்ற ஆணையை வழங்கியதால் அவர் பிரதமரானார். அவர்கள் நரேந்திர மோடியை அவமதிக்கவில்லை, இந்திய அரசியலமைப்பை அவமரியாதை செய்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல் தோல்வி; எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Lok Sabha election failure Edappadi Palaniswami advice

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று (10.07.2024) முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.