ADVERTISEMENT

மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்க மறுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

03:12 PM May 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரவலிலிருந்து தப்பிக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு என கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளன. இந்தநிலையில் பஞ்சாப் அரசு, அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான மாடர்னா, தங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பதாக கூறியது.

இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்களுக்குத் தடுப்பூசி வழங்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "நாங்கள் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களிடம் பேசினோம். இருவரும் தடுப்பூசிகளை எங்களுக்கு நேரடியாக தர மறுத்துவிட்டன. நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி வர்த்தகம் மேற்கொள்வோம் என தெரிவித்துவிட்டன. தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்குமாறு நாங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என கூறியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பது, தடுப்பூசியை இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மாநிலங்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதற்கிடையே டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, வெளிநாட்டு நிறுவங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இவற்றில் எதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மற்ற நாடுகள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்படுத்தியும்வருகின்றன. இந்தியாவில் என்ன கட்டாயம்? நாம் (தடுப்பூசிகளுக்காக) இரண்டு நிறுவனங்களைச் சார்ந்து இருக்கிறோம். அவையும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கின்றன. ரஷ்யா, 2020 ஆகஸ்டில் ஸ்பூட்னிக் V க்கு ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் மக்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் ஸ்புட்னிக்கிற்கு ஒப்புதல் அளிக்க நாம் மறுத்துவிட்டோம். இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளித்தோம். 68 நாடுகள் ஸ்புட்னிக் v-க்கு ஒப்புதல் அளித்து பயன்படுத்துகின்றன. டிசம்பர் மாதத்தில் பைசருக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்தது. நாம் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறோம். 85 நாடுகள் பைசரைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன, 46 நாடுகளில் மாடர்னாவுக்கும், 41 நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சனுக்கும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாம் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறோம். இது நகைச்சுவையா? நீங்கள் (மத்திய அரசு) உலகளவில் தடுப்பூசிகளை வாங்குமாறு கூறுகிறீர்கள். ஆனால் ஒப்புதல் இல்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "உலகெங்கிலும் நாடுகள் தடுப்பூசி வளர்ச்சியில் ஒரு கண் வைத்திருந்தன. அவர்கள் முன்கூட்டியே கொள்முதலுக்கான ஆர்டர்களைத் தந்தனர். நவம்பர் 2020க்குள், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 70 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர்களைத் தந்தன. தங்கள் நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை அந்த நாடுகள் வைத்துள்ளன. ஜனவரி மாதத்திற்குள் இங்கிலாந்து அதன் மக்கள் தொகையில் 70% பேருக்கு போதுமான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஆர்டர்கள் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சீரம் நிறுவனத்துக்குச் சென்றார். ஆனால் அவற்றில் முதலீடு செய்யவில்லை. ஆர்டர்களையும் வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் ஆர்டர் வழங்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடுப்பூசிகளில் முதலீடு செய்யத் தொடங்கியது. இந்திய அரசு தூங்கிக்கொண்டிருந்தது; இப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறது" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT