Skip to main content

'மூன்று முறை உயிர்த்தெழுந்திருக்கின்றேனா?' - முற்றுப்புள்ளி வைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
'Am I resurrected three times?'-concluded host Abdul Hameed

90களில் தொலைக்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பிரபலமானவர் அப்துல் ஹமீது. இலங்கையைச் சேர்ந்த அப்துல் ஹமீது உயிரிழந்துவிட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக இலங்கையிலிருந்து அப்துல் ஹமீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மாண்டவன் மீண்டு வந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்தச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைப்பேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்டு பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டதும் கதறி அழுததைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. எத்தனையோ ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என நினைத்துக் கொண்டேன்.

நேற்று இலங்கை பத்திரிகையில் நான் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது 'மரணம் மனிதனுக்கு தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து நல்ல பக்கத்தை மட்டும், நல்ல நினைவுகளை மட்டும் நிலைநிறுத்திப் பேசி மகிழ்வது' என அந்த வரிகள். அப்படி ஒரு அனுபவம்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. முதல் அனுபவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என்றும் நான் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி, பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்தில் மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் யூடியூப் நடத்தும் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்று பேராசையில் என்னுடைய படத்தை போட்டு பிரபல டி.வி தொகுப்பாளர் மரணம்; கதறி அழுதது குடும்பம் என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார்கள். அது இரண்டாவது முறை. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுந்திருக்கின்றேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

13 மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 13 fishermen arrested; Sri Lankan Navy again atrocity

தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்த நிலையில், தொடர்ச்சி சம்பவமாக இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Chief Minister M.K. Stalin letter To the Union Minister

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடகோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைப்படத் தெரிவித்துள்ளார். அதோடு, IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் நேற்று (01.07.2024) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

Chief Minister M.K. Stalin letter To the Union Minister

1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய  அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். 

Chief Minister M.K. Stalin letter To the Union Minister

அப்போதைய தி.மு.க. தலைவர் கலைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில்‘மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையைத் தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்கக் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான விளைவித்து வரும் இந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.