Allegation by Kerala Governor says Pinarayi Vijayan's involvement in multiple case?

சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

Advertisment

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, கேரள ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி ஆளுநர் ஆரிஃப் கான் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசியிருந்தார். மேலும் அவர், கேரளா முதல்வர் என்னை தாக்க சதி செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார் என்று பேசினார்.

Advertisment

இதனை தொடர்ந்து, வேந்தரான ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்காக வேலை செய்ய வேண்டும். சங்பரிவார்களுக்காக அல்ல என்று கூறி அம்மாநிலத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்து நேற்று (18-12-23) போராட்டம் நடத்தினர். அதே போல், ஆளுநர் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்தனர். அதனை போலீசார் அகற்றினர். இந்நிலையில், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நேற்று பேனர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற பேனர் வைத்திருக்க முடியுமா?. கேரளா போலீஸ் இந்தியாவில் தலைசிறந்ததாகும். ஆனால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த சிறப்புமிக்க போலீஸ் துறையை களங்கப்படுத்திவிட்டார். அவருடைய உத்தரவுக்கு அடிபணிந்து தான் போலீஸ் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அவருடைய வரலாறு உங்களுக்கு தெரியுமா?. அவருக்குஎத்தனை கொலை வழக்குகளில் தொடர்புள்ளது என்று தெரியுமா?அந்த மாணவர்கள் அமைப்பினர் என்னை காயப்படுத்தினால், இங்கே வாருங்கள். அவர்கள் ஏன் இங்கு வரவில்லை?. ஏனென்றால், அவர்கள் கொடுமைப்படுத்துவர்கள் மட்டுமே. அவர்கள் மாணவர்கள் அல்ல. அனைத்து மாணவர்களும் எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். வேறு எந்த மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தவும், நடத்தவும் முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். என்னை கேரளா மக்கள் விரும்புகின்றனர். நானும் அவர்களை விரும்புகிறேன். எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை” என்று கூறினார்.