
உத்தரப் பிரதேச காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நரேஷ் மீனா (26) என்பவர் 9 லட்சம் வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரது ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது சம்பவம் தொடர்பாக, நரேஷ் மீனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஜாமீன் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணன் பஹல் முன்பு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை. ஜாமீன் என்பது ஒரு விதி, சிறை விதிவிலக்கு. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுக்கக்கூடிய எந்தவொரு காரணத்தையும் அரசு தரப்பு முன்வைக்கவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறது” என்று தெரிவித்தார். மேலும் அவர், “ விண்ணப்பதாரர் சிறையில் இருந்து விடுதலையான மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.