கத்துவா சிறுமி வழக்கில் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் தீபிகா சிங்கை ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பாராட்டியுள்ளார்.

Advertisment

ஜம்மு மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, இதுதொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவத் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்தது.

Advertisment

இதுகுறித்து பேசியிருந்த தீபிகா சிங், நான் பாலியல் வன்புணர்வு செய்யப்படலாம். கொல்லப்படலாம். இந்த வழக்கில் வாதாட முடியாமல் போகலாம். நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடி நீதியை நிலைநாட்டவே விரும்புகிறேன்’ என தெரிவித்திருந்தார்.

Advertisment

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு வழக்கில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு அரசியல் மற்றும் பணபலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களை எதிர்த்து ஒரு பெண்ணாக அச்சுறுத்தல்களை சந்தித்துக் கொண்டே, சட்டப்போராட்டம் நடத்தும் தீபிகா சிங் பலராலும் பாராட்டப்பட்டார். அவர்குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், ‘எல்லா சக்தியும் தீபிகா சிங் ராஜாவத்திற்கே’ என பதிவிட்டிருந்தார். நடிகை எம்மா வாட்சன் பெண் விடுதலை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.