நவராத்திரி விழா நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து அக்டோபர் 7- ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் முதல் நாளான இன்று (29/092019) காலை டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் காலை முதலே கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். துர்கா பூஜைக்காக அவர் எழுதிய பாடல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. குறிப்பாக ஜம்மு& காஷ்மீரில் நவராத்திரி விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் புகழ்பெற்றவை கார்பா நடனங்கள். இந்த ஆண்டும் வதோதரா நகரில் வழக்கமான உற்சாகத்துடன் கார்பா நடனப் பயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகமாக நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற கர்நாடக மாநிலம் 'மைசூரு தசரா' விழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இன்று காலை சாமுண்டி மலையில் நாவலாசிரியர் பைரப்பா சாமுண்டீஸ்வரிக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மைசூர் மன்னர் வம்சத்தினர், முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.