All 241 of 242 people passed away gujarat fligh crash

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் நேற்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ளதாவது, ‘2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட Al171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

Advertisment

விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிசஷ் பிரஜை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் முழுமையாக கவனம் செலுத்துகின்றன. கூடுதல் ஆதரவை வழங்க ஏர் இந்தியாவின் பராமரிப்பாளர்கள் குழு இப்போது அகமதாபாத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தின் போது விடுதியில் இருந்த மாணவர்கள் சிலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.