ADVERTISEMENT

“எம்ஆர்ஐ ஸ்கேன் இருக்கும்போது எக்ஸ்ரே எதற்கு” - ராகுலை விமர்சித்த அகிலேஷ் யாதவ்

12:33 PM Nov 15, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலையொட்டி கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்த நாட்டில் பட்டியல் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டுபிடிப்பது மிக அவசியம். உடம்பில் ஏதேனும் ஒரு காயம் ஏற்பட்டால், உடனடியாக எக்ஸ்ரே எடுத்து அந்த காயத்தின் தன்மையை பற்றி நாம் அறிகிறோம். அதேபோல்தான், சாதிவாரி கணக்கெடுப்பும். எக்ஸ்ரே என்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர வேண்டும். அதனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஓ.பி.சி., பட்டியல் சமூகம், பழங்குடியின மக்களின் உரிமைகளை திரும்பப் பெற்றுத் தருவோம்” என்று பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

மத்தியப் பிரேதம் மாநிலம், சட்னா தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (14-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் ‘எக்ஸ்-ரே’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது கருத்து விநோதமாக இருக்கிறது. ‘எக்ஸ்-ரே என்பது அந்தக் காலத்தில் தேவைப்பட்டது. தற்போது எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் வசதிகள் வந்துவிட்டன.

தற்போது சமூகத்தில் பலவித நோய் பரவிவிட்டது. இந்தப் பிரச்சனையை அப்போதே தீர்த்திருந்தால், இவ்வளவு இடைவெளி வந்திருக்காது. ’எக்ஸ்-ரே’ பற்றி பேசுபவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தடுத்து நிறுத்தியவர்கள் தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், காங்கிரஸ் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கான காரணம் அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. தங்களிடம் வாக்கு சதவீதம் இல்லை என்பதனை தெரிந்துகொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT