Akhilesh Yadav challenged BJP to conduct G20 at manipur

Advertisment

மணிப்பூரில் நிலைமை சரியாக இருந்தால் அங்கு ஏன் ஜி20 நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு மந்திரிகளின் கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாடினார். இதனிடையில், இந்த ஜி20 மாநாடு மணிப்பூரில் மட்டும் ஏன் நடக்கவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ்,” உத்தர பிரதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஆனால், மணிப்பூரில் மட்டும் இதுவரை ஜி20 சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. மணிப்பூரில் நிலைமை சரியாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படியென்றால், மணிப்பூரில் ஏன் ஜி20 நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. மணிப்பூரில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சியை நடத்திக் காட்டி அந்த மாநிலத்தில் நிலைமை சரியாகத்தான் இருக்கிறது என்று உலகத்துக்கு காட்டுங்கள்.

Advertisment

எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சிகளை, வாரிசு கட்சி என்றும், ஊழல்மிகுந்த கட்சிகள் என்றும் பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால், அவர் இருக்கக்கூடிய கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா, யோகி ஆதித்யநாத் போன்றோர்கள் வாரிசு அரசியலைத்தான் நடத்துகின்றனர். நான் இப்போது இரண்டு பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டேன். ஆனால், என்னால் நீண்ட பட்டியலையே தர முடியும். பா.ஜ.க தனது தவறுகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது. இன்று இந்தியாவில் மிகப்பெரிய வாரிசு அரசியல் கொண்ட கட்சி என்றால் அது பா.ஜ.க தான்” என்று தெரிவித்துள்ளார்.