Akbar, Sita instructed to change the name of the High Court

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால், அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் இன்று (22.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள இரு சிங்களுக்கும் பெயரை மாற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.