Ajit Pawar will contest against his nephew Yugendra Pawar (R) from Baramati Assembly seat.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், நவம்பர் 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும், இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது.

இந்த நிலையில், அஜித் பவாருக்கு எதிராக அவரது சகோதரர் மகன் யுகேந்திர பவார், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தொகுதி, பவார் குடும்பத்தில் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அஜித் பவார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை 1,65,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Advertisment

Ajit Pawar will contest against his nephew Yugendra Pawar (R) from Baramati Assembly seat.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார் என்ற பெயருடன் சரத் பவார் அணி செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார் வேட்பாளர் சுப்ரியா சுலே, அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால், அஜித் பவார் தலைமையிலான அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்த நிலையில் தான், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரை தோற்கடிப்பதற்காகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதற்காகவும் சரத் பவார் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில், அஜித் பவார் எம்.எல்.ஏவாக இருக்கும்பாராமதி தொகுதியில், அஜித் பவாருக்கு எதிராக அவரின் சகோதர் மகன் யுகேந்திர பவாரை நிறுத்தவுள்ளதாக சரத் பவார் முடிவு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. யுகேந்திர பவார், தற்போது வித்யா பிரதிஷ்தான் சன்ஸ்தா என்ற அறக்கட்டளையின் பொருளாளராக உள்ளார். மேலும் பாராமதி மல்யுத்த வீரர் சங்கத்தை மேற்பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.