Skip to main content

இந்திய - சீன பிரச்சனையில் அஜித் தோவல்... சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடல்...

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

ajit doval speaks with chinese external affairs minister

 

இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

 

இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்தச் சூழலில், இந்திய எல்லைப்பகுதியில் அமைத்திருந்த தற்காலிகக் கூடாரங்களை அப்புறப்படுத்தி பின்வாங்கியுள்ளது சீனா. இந்நிலையில் இதில் இருநாட்டு ராணுவமும் ஒப்பந்தத்தை மதித்துச் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அஜித் தோவல் நேற்று பேசியுள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  

 

அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையே நேற்று நடைபெற்ற இந்தத் தொலைபேசி உரையாடலில், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தத்தின்படி விரைவில் இருநாட்டு ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான செயல்களைத் துரிதப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாகவும் நீடித்ததாகவும் மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக அஜித் தோவல் மற்றும் வாங் யி மத்தியிலான பேச்சுவார்த்தைத் தொடரும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது. 

Next Story

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்; 127 பேர் பலி

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Earthquake that shook China; 127 people lost their lives

வடமேற்கு சீனாவின் கங்சு, குயின்காய் ஆகிய மாகாணங்களில் நேற்று (19-12-23) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லிங்சியா செங்குவான் ஜென் என்ற இடத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஏராளமானோர் உடனடியாக வெளியேற முடியாமல் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மேலும், பலர் தங்களை வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்த மீட்பு படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்தனர். அங்கு சென்ற அவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். ஆனாலும், இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 127 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்து, சீன வானிலை அதிகாரிகள் கூறுகையில், ‘6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் உருவானது’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.  

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது.  இந்த நிலநடுக்கம் குறித்துப் பேசிய சீன அதிபர் ஜின்பிங், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.