Advertisment

“நிர்வாக சீர்கேட்டால் சீரழியும் பாண்லே நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும்” - ஏ.ஐ.டி.யு.சி கோரிக்கை

AITUC request to Puducherry Chief Minister

Advertisment

புதுச்சேரி பால் நிறுவனமான பாண்லே நிறுவனத்தின் சீர்கேடுகளைக் களைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யுசி மாநில பொதுச்செயலாளர் சேது.செல்வம் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்குக் கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், " புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் பால் விற்பனை மற்றும் பாலினை பதப்படுத்தி ஐஸ்கிரீம், பால்கோவா, நெய் போன்ற பொருட்கள் தயாரித்து பான்லே நிறுவனம் நடத்தக்கூடிய பார்லர்கள் மூலமும், முகவர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அமுல் நிறுவனத்திற்கு ஐஸ்கிரீம் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து ஐயாயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இந்தப் பாலினை புதுச்சேரியில் உள்ள பால் சொசைட்டி பிரிவின் மூலம் 50,000 லிட்டர் பாலினை கொள்முதல் செய்து, மீதமுள்ள 55,000 லிட்டர் பால் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் பால் சொசைட்டி மூலமாக ஒரு லிட்டர் 32 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. வெளிமாநிலத்திலிருந்து வாங்கக்கூடிய பால் ஒரு லிட்டர் 42 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இந்த பாலினை வாங்கி வர வாகன செலவு, மின்சார கட்டணம், ஊழியர்கள் சம்பளம், பாலினை பதப்படுத்தி விற்பனைக்கு ஏற்றிச்செல்லும் வாகனக்கட்டணம் என செலவை கணக்கிட்டால் ஒரு லிட்டரின் பால் 48 ரூபாய் அடக்கம் ஆகிறது. ஆனால், பான்லே நிர்வாகம் ஒரு லிட்டர் பாலினை பொதுமக்களுக்கு 44 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால்பான்லே நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஏழரை லட்சமும், மாதத்திற்கு 2 1/4 கோடியும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நஷ்டத்தை சரி செய்ய அரசு நிதி உதவி செய்யாத காரணத்தினால் வங்கிகள் மூலம் 15 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கான பணத்தை பான்லே நிர்வாகம்ரூபாய் 15 கோடி வரை கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாகப் பால் வழங்கி வந்த இந்த நிறுவனங்கள் பணத்தைக் கொடுத்தால்தான் பால்சப்ளை செய்வதென நிறுத்தி விட்டார்கள். இதன் காரணமாகப் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு தனியார் நிறுவனங்கள் விற்கக்கூடிய பாலினை கூடுதல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.

மேலும் இத்தகைய நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக பான்லே ஊழியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் எல்.ஐ.சி, பி.எஃப், வங்கிக் கடன் பணத்தை 2 மாதங்களாகக் கட்டப்படாமல் இருந்து வருகிறது. மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனை, லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகிய பகுதிகளில்பான்லே நடத்தி வந்தபார்லர்கள் தனியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மடுகரை, கூடப்பாக்கம், தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த பார்லர்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் வாங்கி ஐஸ்கிரீம், நெய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக வெண்ணெய் வாங்காமல் ஐஸ்கிரீம், நெய் போன்றவற்றைத்தயார் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பால் தட்டுப்பாடு காரணமாக அமுல் நிறுவனத்திற்குத்தேவையான ஐஸ்கிரீமை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, அமுல் நிறுவனம் பாண்லேவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலை நேரத்தை சில பார்லர்களில் இரண்டு ஷிப்ட் வேலை, ஒரு ஷிப்டாக குறைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிலை தொடர்ந்தால் பான்லே நிறுவனம் நஷ்டம் அடைந்து, நிறுவனத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஊழியர்களின் வேலையும் பறிபோய்விடும். எனவே, இதை எல்லாம் வேடிக்கை பார்க்காமல் முதலமைச்சர் பான்லே நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பீட்டினை ஈடு கட்டுவதற்குத்தேவையான நிதியை உடனடியாக வழங்கி பான்லே நிறுவனம் அழிவுப் பாதைக்குச் செல்லாமல் காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe