ADVERTISEMENT

ஆத்திரமடைந்த மருத்துவ சங்கத்தின் 'பகீர்' அழைப்பு - நாடு முழுவதும் அவசர மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு!

05:49 PM Dec 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் தாங்கள் தீர்ப்பளிக்கும் வரையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைப்பதாக உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை அறிவுறுத்தினர். இதனையடுத்து, மத்திய அரசும் அவ்வாறே உத்தரவாதம் அளித்தது.

அதேநேரத்தில் இதற்கு இளம் மருத்துவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்தொடர்ச்சியாக டெல்லி மருத்துவர்கள் கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தை தொடங்கினர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து அவசர சிகிச்சை பிரிவு பணிகளையும் மருத்துவர்கள் புறக்கணிக்க தொடங்கினார். பின்னர் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தங்களது போராட்டத்தை ஒருவாரத்திற்கு நிறுத்தினர். இருப்பினும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாததால், கடந்த 17 ஆம் தேதியிலிருந்து ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தை பேரணி செல்ல முயன்ற ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்களை காவல்துறையினர் தடுத்து சிலரை கைது செய்தனர். மேலும் டெல்லி போலீஸார், தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும் ரெசிடென்ட் மருத்துவர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்களும், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு மருத்துவர்களும் ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கவுன்சிலிங்கை விரைவுபடுத்துவதற்கான அரசின் திட்டங்கள் என்ன என்பதையும் அறிக்கை வெளியிட வேண்டிய நேரம் இது. 24 மணி நேரத்திற்குள் அரசாங்கத்திடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்றால், எய்ம்ஸ் ரெசிடென்ட் மருத்துவர்கள் கூட்டமைப்பு நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். இதில் அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் போராட்டத்தால் பல மருத்துவமனைகளில் அவசரகால சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மருத்துவமனைகளில் உள்ளவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால், டெல்லியில் மருத்துவ சேவைகள் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, ரெசிடென்ட் மருத்துவர்கள் மீது டெல்லி போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்து, நாளை முதல் தங்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களை நாளை முதல் அவசரகால சேவை உட்பட அனைத்து சுகாதார சேவைகளிலிருந்தும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தசூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேச நலனை கருத்தில் கொண்டு ரெசிடென்ட் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், கலந்தாய்வை நடத்த முடியவில்லை என்றும், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாகவும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என நம்புவதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT