Ahmedabad plane incident Key equipment recovered

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (12.06.2025) மதியம் 01.39 மணிக்கு பேயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை (விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார். இருப்பினும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது.

இதில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விமானம் வெடித்துச் சிதறி விழுந்த பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் விமானத்தின் எமர்ஜென்சி லொகேஷன் டிரான்ஸ்மிட்டர் (E.L.T. - Emergency Locator Transmitter) என்ற கருவி மீட்கப்பட்டுள்ளது. விமானமானது கடலிலோ, மலைப்பகுதியிலோ விழும்போதோ, மனிதர்களால் எளிதில் சென்று சேர முடியாத இடங்களில் விமானங்கள் விழும்போதோ இந்த கருவியானது தானாகவே செயல்பட்டு விமானத்தின் இருப்பிடம் குறித்து சமிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.

Advertisment

அதே சமயம் விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு இணையாகக் கருதப்படும் டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டர் என்ற கருவி மூலம் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் விபத்தின் போதும், இந்த பயணத்தின் போதும் என்ன பேசிக்கொண்டார்கள் என அனைத்துமே பதிவாகியுள்ள கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் விமானம் புறப்படும் போதும், விபத்து நடக்கும் போதும், விமானிகள் என்ன பேசினார்கள், அந்த விமானத்தை இயக்குவது தொடர்பாக விமானிகள் இடையேயான கருத்து பரிமாற்றும் உள்ளிட்ட அனைத்துமே துல்லியமாக டிஜிட்டல் வாய்ஸ்ரெக்கார்டரில் பதிவாகியிருக்கும். எனவே இந்த இரு கருவிகளும் போயிங் நிறுவனத்தின் உதவியுடன் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. இதன் மூலம் விமானிகள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்படும். இதன் வாயிலாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.