ahmedabad plane crash survivor Vishwas Kumar attended the brother funeral

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த 12ஆம் தேதி மதியம் இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தானது. உலகத்தையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

பயணிகளில் 169 இந்தியர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

279 உயிர்களை பலிகொண்ட இந்த துயரமான விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை, 206 பாதிக்கப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் வெற்றிகரமாக பொருந்தியுள்ள நிலையில், 169 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ahmedabad plane crash survivor Vishwas Kumar attended the brother funeral

இந்த நிலையில், விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கின் பங்கேற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ், நேற்று (18-06-25) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், விஸ்வாஸ் குமார் தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். விபத்தில் விஸ்வாஸ் குமார் உயிர் பிழைத்த நிலையில், அவருக்கு அருகில் இருந்த அவரது சகோதரர் அஜய் குமார் உயிரிழந்தார். டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பின்பு, அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அஜய் குமாரின் இறுதிச் சடங்கு நேற்றே நடைபெற்றது.

Advertisment

இதனிடையே மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஸ்வாஸ் குமார், முழு குணமடையாத போதிலும் தனது சகோதரர் அஜய் குமாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். தனது சகோதரரின் உடலை தனது தோள்களில் சுமந்து கொண்டு அழுதப்படியே தகன மைதானத்திற்கு எடுத்துச் செல்லும் வீடியோ காண்போரை கண்கலங்க செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.