Ahmedabad Air India Plane incident

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “அகமதாபாத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனதை உடைத்துள்ளது. இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகக் களத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் “அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நடந்த இடத்திற்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைவாக விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காகக் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏ.ஐ. 171 விபத்துக்குள்ளானதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.