
புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் 72 ஆம் ஆண்டு சட்ட நாள் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, டிக்கா ராமன், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்குசான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, " புதுச்சேரியில் வழங்கப்பட்டு வரும் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் பல்வேறு காரணங்களால் நிரப்ப முடியவில்லை. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கேட்டு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினோம், ஆனால் கடைசியில் பெட்ரோல் செலவுகள் ஆனது தான் மிச்சம். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்தால் சிறந்த ஆட்சியைக் கொடுத்து மாநிலம் முன்னேற்றம் அடையும்'' என்றார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், அசோக்பாபு, சட்டத்துறைச் செயலர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன், துணைத் தலைவர் தனலட்சுமி ,பொதுச் செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி நீதிமன்ற நடவடிக்கை குறித்து பேசியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Follow Us