Skip to main content

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் இரண்டு உயிரிழப்பு!

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

african breed leopard madhya pradesh kuno national park incident
கோப்பு படம்

 

இந்தியாவில் சிறுத்தை இனம் 1952 ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை இந்தியா கொண்டு வரத் திட்டங்கள் வகுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டியிருந்தது. இதனடிப்படையில் ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் எட்டு ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த எட்டு சிறுத்தைகளையும் பாதுகாக்க அரசு முடிவு எடுத்திருந்தது.

 

இதனடிப்படையில் கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் உடலில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாட்டுச் சிறுத்தைகள் பிற நாட்டிற்கு வழங்கப்பட்டது உலகிலேயே இது முதல் முறை என்றும் கூறப்பட்டது. ஆப்ரிக்காவின் நமீபியாவிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு இடைநில்லா சரக்கு விமானத்தின் மூலம் 8 சிறுத்தைகளும் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் பிறகு அங்கிருந்து 3 சிறுத்தைகள் மத்தியப்பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவிற்கு இந்த சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மூன்று சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடியால் வனத்திற்குள் விடுவிக்கப்பட்டன.

 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட  உதய் என்ற 6 வயது சிறுத்தை வழக்கத்தை விட நேற்று (23.04.2023) மிகவும் சோர்வாகக் காணப்பட்ட சிறுத்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாலை நான்கு மணியளவில் உயிரிழந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஷாஷா என்ற சிறுத்தை சிறுநீரக பாதிப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்