Skip to main content

காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Advice from Congress MPs in Parliament

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு துணைத் தலைவர் காங்கிரஸ் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்தார். விவாதத்தின் போது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

 

இதையடுத்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், “நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பேசிய பாஜக உறுப்பினர் நிதிஷ்காந்த் துபே ஒரு வார்த்தை கூட மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசவில்லை; பிரதமர் மோடி அரசை எதிர்த்துப் பேசினால் அமலாக்கத்துறை வீட்டுக்கு வருமென்று நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர் மிரட்டுகிறார்; மேற்கு வங்க மாநிலத்தைக் கண்காணிக்க பல்வேறு ஆணையங்களை அனுப்புகிறது ஒன்றிய அரசு, ஆனால் மணிப்பூருக்கு எந்த ஆணையத்தையும் அனுப்பவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி எரியும் போது 7 நாடுகளுக்குப் போனார், எகிப்து பிரமிடுகளைப் பார்க்கப் போனார். இருப்பினும், மணிப்பூருக்குச் சென்று அங்கு நிலைமையைப் பார்க்கவில்லை. பிரதமர் மோடி என்ன விற்பனைப் பிரதிநிதியா? உலகப் பிரதிநிதியா? மணிப்பூரில் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.

 

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யும் விவாதத்தில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பலரும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து நாளை (10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.

 

இதற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் காலை 10 மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்