Advertisment

‘கிரிக்கெட் மைதானம் அரசுடைமையாக்கப்படும்.; மண்ணின் வீரர்களுக்கு முன்னுரிமை’ - அதிமுக 

AIADMK says cricket stadium in Puducherry will be made state-owned

புதுச்சேரியில் கிரிக்கெட் க்ளப்பில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வெளி மாநில வீரர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக புதுச்சேரி மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், புதுச்சேரி மண்ணில் பிறந்த, மண்ணின் மைந்தர்கள் தங்கள் உரிமைக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராட வேண்டிய நிலைக்கு இரட்டை ஹிட்லர் ஆட்சி தள்ளி வருகிறது. திட்டங்கள், சலுகைகள், வாய்ப்புகள் அனைத்தும் மண்ணின் மைந்தர்களுக்கு அல்ல, மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே என்பதே புதுச்சேரி அரசின் கொள்கையாக உள்ளது. இதனால் அனைத்து துறையிலும் வெளிமாநிலத்தினர் ஆக்கிரமிப்பு அதிகரித்து, புதுச்சேரி மண்ணில் பிறந்ததே, பெரும் சாபக்கேடு என எண்ணும் அளவுக்கு மண்ணின் மைந்தர்கள் சொல்லவொண்ணா துயரத்தையும், சங்கடத்தையும் ஆட்சியாளர்களால் அனுபவித்து வருகின்றனர்.

Advertisment

குறிப்பாக புதுச்சேரி விளையாட்டு துறையிலும் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் பண பலம், அதிகார பலம், ஆட்சியாளர்களின் துணையால் வெளிமாநிலத்தினரோடு போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர். வருவாய் இன்றி, வாழ்க்கையை நகர்த்தவே இளைஞர்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைய சமுதாயத்தினர் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு கொத்தடிமையாக வேலைக்கு செல்கின்றனர்.

துத்திப்பட்டில் செயல்பட்டு வரும் சி.ஏ.பி எனப்படும் பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன், புதுச்சேரி மாநில திறமையான இளைஞர்களை, துச்சமென மதிக்கிறது. ஆட்சியாளர்களும், இந்த கிரிக்கெட் சங்கமும் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. பண பலம் கொண்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை, புதுச்சேரியில் வசிப்பதாகவும், படிப்பதாகவும், போலி சான்றிதழ் அளித்து புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இடம்பெறுகின்றனர். இதனால் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சில மாதம் முன்புதான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்குவதில் போலி சான்றிதழ் அளிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தற்போது விளையாட்டிலும் போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான திறமையான வீரர்கள் இருந்தும் ஒரு சிலர் கூட கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியவில்லை. பணம் கொடுத்தால்தான் அணியில் இடம் பெறலாம் என்ற துர்பாக்கிய நிலை நிலவுகிறது. வசதியற்ற புதுச்சேரி ஏழை இளைஞர்களால் துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தைக்கூட பார்க்க முடியவில்லை. புதுச்சேரி கிரிக்கெட் அணியில் வீரர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள் தேர்விலும், போட்டிகள் நடத்துவதிலும் நடப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிரிக்கெட் மட்டுமின்றி, எந்த விளையாட்டிலும் புதுச்சேரி இளைஞர்களுக்கு முக்கியத்துவத்தை புதுச்சேரியை ஆளும் இரட்டை ஹிட்லர் ஆட்சி அளிப்பதில்லை. உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட சிந்தடிக் ஓடுதளம், ஹாக்கி, கால்பந்து மைதானம் ஆகியவை பயன்படுத்தப்படாததால், திறப்பு விழா காணும் முன்பே பழுதாகியுள்ளதே இதற்கு உதாரணம்.

ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை சீரழிந்து கிடக்கிறது. புதுச்சேரியில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ விசாரணை நடத்த மேதகு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

2026ம் ஆண்டு இளைஞர்கள் நலன் கருதும், இளைஞர்கள் தலைமையிலான நமது நல்லாட்சி புதுச்சேரியில் அமையும். அப்போது புதுச்சேரி மாநில இளைஞர்களின் திறமைகள் அனைத்தும் வெளிக்கொண்டுவரப்படும். புதுச்சேரியில் தனியார் வசம் உள்ள துத்திப்பட்டு மைதானங்கள் அரசுடைமையாக்கப்படும். புதுச்சேரியை சேர்ந்த உடல் தகுதி வாய்ந்த, திறமையான அனைத்து விளையாட்டுகளுக்கும், வீரர்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்வு செய்யப்படுவர். புதுச்சேரி மண்ணின் அருமை, இளைஞர்களின் திறமை, நாட்டிற்கே ஒரு நாள் பெருமை தேடித்தரும் வாய்ப்பை உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

admk Puducherry Rangaswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe