ADVERTISEMENT

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்

10:20 PM Aug 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுகையில், ''எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றே கொடுத்துவிட்டார். அங்கு அமைதியைக் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்களை விடமாட்டோம். மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அவையில் மீண்டும் மீண்டும் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஆதிர் ரஞ்சன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாடாளுமன்ற நிர்வாகத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளக் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT