Skip to main content

அகிலேஷ் யாதவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

Actor Rajinikanth meets Akhilesh Yadav

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

 

இதையடுத்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில், அங்குள்ள ராஜ்பவனுக்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிசுப்பொருட்களை யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்.

 

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தித்தேன். அப்போதிலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். அதிலிருந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வருகிறோம். 5 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை, இப்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலிவுட் தயாரிப்பாளருடன் ரஜினி கூட்டணி

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
rajinikanth team up with bollywood producer Sajid Nadiadwala

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது. இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டது. 

இந்த நிலையில், ஒரு படத்திற்காக பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலாவுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  

Next Story

கலைஞர் நினைவிடத் திறப்பு விழாவில் ரஜினி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
rajini at kalaignar memorial opening ceremony

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு அருகில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். மேலும் வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளார்.