தொடரும் வன்முறையால் பதற்றம்; மணிப்பூர் மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு!

Action taken by Manipur state government!

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.

இத்தகைய சூழலில் தான் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த ஒருவரைத் துப்பாக்கி ஏந்திய ஆய்த குழுவினர் சுட்டுக் கொலை செய்தனர். அதே வேளையில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர். முன்னதாக மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் கொய்ரேங் சிங் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இந்த இரு சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வெவ்வேறு மூன்று இடங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு மணிப்பூரில் கலவரத்தைத் தடுக்க தவறியதாகக் கூறி முதல்வர் பைரன் சிங் இல்லம், ஆளுநர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். அதே சமயம் இம்பால் பகுதியின் மையப் பகுதியாக விளங்கும் இமாம் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அசாதாரண சூழல் நிலவுவதால் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் மாற்றும் தவுபல் உள்ளிட்ட மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

மாநிலத்திற்குள்ளே இரு குழுவினருக்கு இடையே அவதூறு பரப்பப்பட்டிருந்த போது, அவதூறுகளை குறைக்கும் வகையில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மணிப்பூரில் கடந்த ஒரு வருடமாக இணைய சேவையை முடக்கியிருந்தது. இந்த இணைய சேவை, கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநிலத்தில் மீண்டும் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு பதற்றம் நிலவுவதால் செப்டம்பர் 15ஆம் தேதி இணைய சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 20ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கத்தை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

internet manipur
இதையும் படியுங்கள்
Subscribe