உக்ரைன் போரினால் ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு வந்துள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ஏழு விமானங்களை அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம் ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகருக்கும், தலா ஒரு ஏர் இந்தியா, இண்டிகோ விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கும் இயக்கப்பட உள்ளது. இந்த ஏழு விமானங்களும் அடுத்த 24 மணி நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.