/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karnataka-mini-ni_0.jpg)
சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.
இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாககர்நாடகஅரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத்தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)