Acid on female lawyer in inside court in uttar pradesh

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் வழக்கறிஞர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டம் தாகுர்த்வாரா பகுதியைச் சேர்ந்தவர் சஷி பாலா (35). இவர், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும் தனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், சஷி பாலாவை வழிமறித்தனர். அதில் ஒருவர், சஷி பாலாவின் தலையின் மீது துப்பாக்கியை சுட்டிகாட்டியுள்ளார். மற்றொருவர், சஷி பாலா மீது ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதில் காயமடைந்த சஷி பாலாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்கள் அங்கு வருவதற்குள் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு மயக்கமடைந்த சஷி பாலாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்கள், சச்சின் குமார் மற்றும் நிதின் குமார் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment