
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் ஆலப்புழா நகரிலுள்ள ஏரிக்கரையோரம், வாத்துகள் கொத்துக் கொத்தாக தீடீரென்று செத்து விழுந்திருக்கின்றன. தொடர்ந்து கோட்டயம் பகுதியிலுள்ள வாத்துகள் இரை எடுக்க முடியாமல் விழுந்து மடிந்துள்ளன.
கேரள கால்நடைத் துறையின் இயக்குனர் குழு, ஸ்பாட்டிற்கு விரைந்துவந்து மடிந்த வாத்துகளை உடற்கூறாய்வு செய்ததில், பறவைக் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன. மற்ற வாத்துப் பண்ணைகளிலும் உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் நோய், மற்ற கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ பரவிவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த இரண்டு தினங்களில் மட்டும், கோட்டயம், குட்டநாடு, ஆலப்புழா பகுதியின் 26 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
கோட்டயம், ஆலப்புழா ஆகிய பகுதிகளுக்கு, வருடம் தோறும் வருகிற வெளிநாட்டுப் பறவைகளின் மூலமாகவும் (மற்ற பறவைகளுக்கு) இந்த வைரஸ் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த வருடமும் இது போன்று ஆலப்புழாவில்தான் பரவைக் காய்ச்சல் முதலில் பரவியது. இம்முறையும் வெளிநாட்டுப் பறவைகளின் மூலம் பரவியுள்ளது. விரைவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து வைரசின் தாக்கம் அழிக்கப்படும் என்கிறார்கள் கேரள சுகாதாரத் துறையினர்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக கேரள எல்லைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச் சாவடியில் கால்நடை மருத்துவர் ஜெயபால் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
மேலும் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குனர் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவினர், மூன்று ஷிஃப்ட்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் கால்நடை மருத்துவர் ஜெயபால்.