Abhishek Banerjee challenges BJP leaders

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் டெல்லியில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த அவர், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார்.

Advertisment

இது கொல்கத்தா வழக்காக இருந்தாலும், டெல்லி வரவழைத்துள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்டதால், பா.ஜனதா பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதைத் தவிர பா.ஜனதாவுக்கு வேறு வேலை இல்லை. நான் கடந்த நவம்பர் மாதம், பொதுக்கூட்டங்களில் சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன். நான் 10 காசு சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த மத்திய அமைப்பாவது நிரூபித்தால் சி.பி.ஐ.யோ, அமாலாக்கத்துறையோ விசாரணை நடத்தவே தேவையில்லை.

Advertisment

நானே மேடை மீது ஏறி, பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன். நான் பா.ஜனதா தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை அமைப்புகள் என்ன சாதித்தன என்பது பற்றியோ, மோடி ஆட்சியில் நாட்டின் கதி பற்றியோ என்னுடன் விவாதிக்க வரத்தயாரா? இடம், நாள், நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன். விவாதத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்காவிட்டால், அதன் பிறகு நான் அரசியலில் கால் பதிக்கமாட்டேன்” என அவர் கூறினார்.