டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (22-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கிறேன். நீதி வழங்கப்பட வேண்டும். நிகழ்வின் இரண்டு பதிப்புகள் உள்ளன. இரு தரப்பையும் போலீசார் நியாயமாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது என ஸ்வாதி மாலிவால் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் முழு இராணுவத்தையும் என் மீது கட்டவிழ்த்துவிட்டு, என்னை பாஜக ஏஜென்ட் என்று அழைத்த பிறகு, என் குணத்தை படுகொலை செய்த பிறகு, எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை கசியவிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட என்னை அவமானப்படுத்துவது, குற்றம் சாட்டப்பட்டவருடன் சுற்றித் திரிவது, குற்றம் நடந்த இடத்திற்கு அவரை மீண்டும் அனுமதிப்பது, சாட்சியங்களை சிதைப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய முதல்வர், இறுதியாக அவர் இந்த விஷயத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை விரும்புவதாகக் கூறுகிறார். முரண்பாடு ஆயிரம் முறை மரணித்துவிட்டது. இந்தப் பேச்சு எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.