சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு சிறுமி கதறியழுகிறார். அவருக்கு நெருக்கமான யாரோ ஒருவர் இறந்துவிட்டார், அதுதான் இந்த அழுகைக்குக் காரணம் என்று வீடியோவை பதிவுசெய்தவர் எண்ணினார். ஆனால், மரங்கள் வெட்டப்பட்டதைத் தாங்கிக் கொள்ளாமல் அவர் அழுதிருப்பதை பின்னர் தெரிந்துகொண்டு, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisment

9 year old manipuri girl becomes environment ambassador

மணிப்பூர் மாநிலத் தலைநகருக்கு அருகிலிருக்கிறது காக்சிங் நகரம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி அமு டோம்பி, தான் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும்போது தன் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் இரண்டு குல்முகர் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அடுத்த நான்காண்டுகளில் அவை பெரிய மரங்களாக வளர்ந்தன. சமீபத்தில், சாலை விரிவாக்கம் என்ற காரணத்தைச் சொல்லி, அமு டோம்பி நட்ட மரங்களோடு சேர்த்து அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற மரங்களையும் வெட்டிச் சாய்த்தனர் உள்ளூர் அரசு நிர்வாகிகள். இதைத் தாங்கிக் கொள்ளாமல்தான் அமு டோம்பி கதறி அழுதிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதை கவனித்த மணிப்பூர் முதல்வர் நோங்தோம் பாம் பிரென், அமு டோம்பியை நேரில் சந்தித்து அவரது எண்ணத்தைப் பாராட்டி 20 மரக்கன்றுகளை பரிசாக வழங்கியிருக்கிறார். பின்னர், இதுபோன்ற சூழலில் ஒரு வயதுவந்தவர் இருந்திருந்தால் பெரிதாக எண்ணியிருக்க மாட்டார். ஆனால், இந்தச் சிறுமி இயற்கையை, தான் நட்ட மரங்களை அளவுக்கதிகமாக நேசித்திருப்பதால்தான், அது அழுகையாக வெளிப்பட்டிருக்கிறது. எனவே, இவரைத்தவிர பசுமைத் திட்டங்களுக்கு சரியான தூதர் கிடைக்க மாட்டார் என்று முடிவுசெய்து, அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவையும் அவருக்கு வழங்கியிருக்கிறார்.

Advertisment

அடுத்த ஓராண்டுக்கான மணிப்பூரின் பசுமைத் தூதர் பதவியை வெறும் ஒன்பது வயதே நிரம்பிய அமு டோம்பி வகிக்க இருக்கிறார். திரைப் பிரபலங்களைத் தூதராக வைத்தால், அரசுத் திட்டங்கள் விரைவாக மக்களிடம் போய்ச் சேரும் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்திருக்கிறது மணிப்பூர் அரசு.