Skip to main content

7 ஆவது சம்மன்; அசராத அர்விந்த் கெஜ்ரிவால்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
NN

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப். 14 ஆம் தேதி 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அதில், வருகிற 19 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்திருந்தது. அதனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், தற்போது இன்று 7 ஆவது முறையாக அமலாக்கத்துறை அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வரும் பிப்.26 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.