Skip to main content

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி! - வீடு திரும்பப் போவதில்லை என விவசாயிகள் அறிவிப்பு!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

farmers

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், இன்று 40வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசோடு இதுவரை 6 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் ஐந்துகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.


அதனைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஆனால் இப்பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய விவசாயப் பிரதிநிதிகள், "வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாதவரை வீட்டிற்குச் செல்லமாட்டோம்" எனவும், "வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெறுதல் என்பதைத் தவிர்த்து வேறு எது குறித்தும் பேச விரும்பவில்லை. வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்படாதவரை, போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம்" எனவும் கூறியுள்ளனர்.


பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயச் சங்கங்கள், வேளாண் சட்டங்கள் குறித்து ஒவ்வொரு பகுதியாக விவாதிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் விவசாயச் சங்கங்கள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால் எங்களால் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. இன்றைக்கு நடந்த பேச்சுவார்த்தையைப் பார்க்கும்போது, எங்கள் அடுத்த சந்திப்பின்போது அர்த்தமுள்ள விவாதத்தை மேற்கொண்டு, முடிவை எட்டுவோம் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை வரும் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்