560 OBC, SC, ST student seats doctoral studies have been taken away says Su. Venkatesan

இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்று மதுரை நாடாளுமன்ற எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய கல்வி இணையமைச்சர் கொடுத்த பதிலையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர், “இந்தியாவில் உள்ள ஐஐடி களில் 2023 - 24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ். சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் தந்துள்ளார்.

Advertisment

நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடி களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை. முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.

6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5 % இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Advertisment

பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும். நாடாளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.