Skip to main content

5 மாநில தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

5 state elections Preparations are intensive

 

இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரும், துணை ஆணையர்களும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் ஆணையர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

 

அதே சமயம் இம்மாத இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையர்கள் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரத்தில் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.