5 Passengers lost their lives due travel train maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறநகர் ரயில் ஒன்று இன்று (09-06-25) சென்று கொண்டிருந்தது. ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சில பயணிகள் ரயிலின் கதவுகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர்.

மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கதவுகளில் தொங்கியபடி பயணித்த 10 முதல் 12 பேர் வரை திடீரென தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் ரயிலில் பயணித்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலின் கதவுகளில் பயணித்த 5 பேர் பலியான சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரயில்கள் எதிர் எதிர் திசைகளில் சென்ற போது பயணிகள் இருவரின் முதுகு பைகள் ஒன்றோடொன்று மோதியதால் பயணிகள் கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் தயாரிக்கப்படும் அனைத்து உள்ளூர் ரயில்களிலும் தானியங்கி கதவி மூடும் வசதிகளை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர் திலீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தற்போது சேவையில் உள்ள அனைத்து ரேக்குகளும் மறுவடிவமைப்பு செய்யப்படும். மேலும், மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் கதவு மூடும் வசதி வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார். இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.