ADVERTISEMENT

10 மாவட்டங்களில் அதிகமான கரோனா பாதிப்பு; முன்பதிவின்றி தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு!

07:02 PM Mar 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு கரோனாவின் இரண்டாவது அலையை நோக்கிச் செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்தியாகவேண்டும் வேண்டும் என மாநில முதல்வர்களை அறிவுறுத்தினார். இருப்பினும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாட்டின் 10 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், கரோனா அதிகமுள்ள மாநிலங்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது, புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், அவுரங்காபாத், பெங்களூரு நகர்ப்புறம், நாந்தேடு, டெல்லி மற்றும் அகமதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நாட்டின், கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில், வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக இருக்கிறது. இதில் மகாராஷ்டிராவின் வாராந்திர சராசரி 23% ஆகவும், பஞ்சாப்பின் வாராந்திர சராசரி 8.82% ஆகவும், சத்தீஸ்கரின் வாராந்திர சராசரி 8% ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் வாராந்திர சராசரி 7.82% ஆகவும், தமிழ்நாடின் 2.50% ஆகவும், கர்நாடகாவின் வாராந்திர சராசரி 2.45% ஆகவும், குஜராத்தின் வாராந்திர சராசரி 2.2% ஆகவும், டெல்லியின் வாராந்திர சராசரி 2.04% ஆகவும் உள்ளது.

இந்த மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பரிசோதனை எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை என அவர்களிடம் கேட்டோம். ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் கவனம் செலுத்தியவாறு மற்ற சோதனைகளையும் அதிகரிப்பது அவசியம். பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்தல் நடைபெறவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அதனை உண்மையிலயே செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களால் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால், அமைப்புகள் மூலம் தனிமைப்படுத்தப்படவேண்டும்.

இந்தியாவில் 807 பேர் இங்கிலாந்து வகை கரோனாக்களாலும், 47 பேர் தென்ஆப்பிரிக்க வகை கரோனாவாலும், ஒருவர் பிரேசில் வகை கரோனாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு 'கோ-வின்' செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இல்லையென்றால், அருகில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கு மாலை 3 மணிக்கு மேல், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றிதழுடன் சென்று கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT