Advertisment

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 4 பேர் கைது; 4 பெண்கள் மீட்பு

4 women arrested puducherry

Advertisment

புதுச்சேரி அழகிய சுற்றுலா பிரதேசம் என்பதாலும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கான வசதிகள் உள்ளதாலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து, தங்கி, சுற்றுலா தளங்களை பார்வையிட்டு மகிழ்வதுடன், நண்பர்களுடன் உற்சாக கேளிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சூதாட்ட விடுதிகள், நடன விடுதிகள் உள்ளதுடன், பாலியல் தொழில் நடத்தும் இடங்களும், அதில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளிலும், நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சொகுசு தங்கும் விடுதிகளிலும் இதுபோன்ற உல்லாசங்கள் அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி சமீப காலமாக வீடுகளிலும் பெண்களை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை கொண்டு வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் நடைபெற்று அதிகரித்து வருகிறது.

அதையடுத்து புதுச்சேரியில் பாலியல் தொழிலை ஒழிக்க சீனியர் எஸ்.பி தீபிகா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எஸ்.பி பக்தவச்சலம் மேற்பார்வையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பல இடங்களில் பாலியல் தொழிலில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீட்கப்படுகின்றனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மூலக்குளம், பாரிஸ் நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் ரெட்டியார்பாளையம் போஸ்ட் ஆபீஸ் விதியை சேர்ந்த அந்தோணி (வயது 40), உழவர்கரை மடத்து வீதியைச் சேர்ந்த சங்கர் (எ) ஆரோக்கியநாதன் டில்ராக் (54) மற்றும் 3 பெண்கள் அங்கு இருந்தனர். விசாரணையில் வாடகைக்கு வீடு எடுத்து வெளியூர்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்தோணி, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோல் உருளையன்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அண்ணா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கோவிந்தசாலை சேர்ந்த லதா(35), தவளைக்குப்பம் சரஸ்வதி (38), புதுச்சேரியை சேர்ந்த செந்தில்(35) ஆகியோர் வெளியூர் பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து செந்தில் தப்பி சென்றார். லதா மற்றும் சரஸ்வதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான லதா, சரஸ்வதி மீது ஏற்கனவே இதுபோன்று வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரெட்டியார் பாளையம், பெரியகடை, கோரிமேடு, ஒதி, உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ஆறு விபச்சார வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வழக்குகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த புரோக்கர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புரோக்களிடம் இருந்து 14 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல்களில் அறை எடுத்து பாலியல் தொழில் செய்தால் போலீசார் எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவது புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிக்கும் நபர்களின் வீட்டை தேடி வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலை அமோகமாக நடத்தி வருகின்றனர்.

police arrested Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe