
விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர், சிறுமியர் காருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டம் துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மணஷ்வி (6). இந்த 4 சிறுவர்களும் விளையாடச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் நான்கு பேரும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பூட்டிய கார் ஒன்றில் நான்கு சிறுவர்களும் மயங்கி கிடந்துள்ளனர். இதனை கண்ட பெற்றோர்கள், கார் கண்ணாடியை உடைத்து 4 பேரையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சாருமதி, சரிஷ்மா ஆகியோர் சகோதரிகள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காருக்கு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென கதவு மூடிக் கொண்டது என்றும், காருக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த 4 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.