Skip to main content

மாநிலங்களவையில் நிறைவேறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

33% reservation for women

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கி நடைபெற்றது.

 

இந்த மசோதா மீதான விவாதத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசினர். மேலும், இந்த மசோதா நிறைவேற்றுவதில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து பல கேள்விகளையும் எழுப்பின. அதற்கு பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 456 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

 

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்ற நிலையில், வாக்கெடுப்பு பெரும்பான்மையில் முடிந்ததால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லீம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்தார். 

 

அதேபோல், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் ஜலீலும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்ததால், அவர்கள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நேற்று (20-09-2023) மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாநிலங்களவையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 171 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. மேலும், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதற்கான உறுதியான தேதியை அறிவிக்க வேண்டுமெனக் காங்கிரஸ் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.