Skip to main content

மத்திய அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு - ஆய்வறிக்கையில் தகவல்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

pm modi cabinet

 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் தேர்தல் பிராமணப் பத்திரத்தை ஆய்வுசெய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையின்படி, இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 24 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 4 பேர் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குகள் உள்ளன. 5 பேர் மீது வகுப்புவாத ஒற்றுமையைக் குலைத்ததாக வழக்குகளும், 7 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குகளும் உள்ளன.

 

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் இந்த அறிக்கையின்படி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ஒரு அமைச்சருக்கு 16.24 கோடி சொத்துள்ளது. நான்கு பேருக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.

 

அதேபோல், 12 மத்திய அமைச்சர்கள் 8 வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளனர். 64 அமைச்சர்கள் பட்டப்படிப்போ அல்லது அதற்கு மேலோ படித்துள்ளனர். இரண்டு பேர் டிப்ளமோ படித்துள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.